திங்கள், 12 ஜூன், 2017

புல்லாங்குழலும் இருபது துளைகளும் நூல்முகம் - Thenammai Lakshmanan

http://honeylaksh.blogspot.com/2017/03/blog-post_53.html


சீதா – மகிழினியின் புல்லாங்குழலும் இருபது துளைகளும் – நூல்முகம்.



சீதா – மகிழினியின் புல்லாங்குழலும் இருபது துளைகளும் – நூல்முகம்.

கவிதைத் தொகுதி என்பது அருகிவரும் காலம் இது. இப்போது முகநூல் கவிஞர்கள் 20 பேரின் கவிதைகளில் சிலவற்றைத் தொகுத்து அழகான புத்தகமாக்கம் செய்திருக்கிறார்கள் சீதா யாழினி. ஒவ்வொருவரின் கவிதைகளும் அழகும் அற்புதமாகவும் இருந்தாலும் அதில் ஒரு சில கவிதைகள் வெறும் வார்த்தை வர்ணனைகளாகவும் இருக்கின்றன. கவிஞர்கள் இன்னும் நன்றாக இருக்கும் தங்கள் கவிதைகளில் சிலவற்றைத் தொகுத்துக் கொடுத்திருக்கலாம். ஆனாலும் தொகுப்பு முயற்சிக்கு அன்பும் வாழ்த்துக்களும். !



சித்ரா சுகுமாரின் அட்டைப்பட ஒவியம் அழகு. பின்னட்டையில் இருபது கவிஞர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அணிந்துரை வழங்கியவர்களின் புகைப்படமும் வெளியிட்டிருப்பது சிறப்பு. என் முகநூல் நட்புக்களான மனுஷி, யோ. புரட்சி, இயக்குநர் எழில், யாழிசை மணிவண்ணன், வலங்கைமான் நூர்தீன் ஆகியோர் அணிந்துரை வழங்கி இருக்கின்றார்கள். அப்துல் கலாம் பற்றி மூவர் எழுதி இருக்கின்றார்கள். சில அன்றன்றைய நிகழ்வுகள் பற்றிப் பேசுகின்றன. தாய், குழந்தை, பாசம், அன்பு, மனிதநேயம் பற்றிப் பேசும் கவிதைகளில் அஃறிணையின் வாய்மொழியாக ஆடு சொல்லும் கவிதையும் இருக்கிறது. 



இனி என்னை அசத்திய ஒவ்வொருவரின் கவிதைகளும் தனித்தனியாக. ஹைக்கூ க்ளெரிஹ்யூ கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.  

கவிஞர் வெ சுப்ரமண்யத்தின் கவிதை

காலம்

மேய்ச்சல் நிலத்தில் கட்டிப் போட்ட
பசுவும் கன்றுமாய்ச் சுற்றி வந்து
காலம் மேய்ந்தன கடிகாரமுட்கள்.

கவிஞர் இந்து சம்யுக்தாவின்

மகளதிகாரத்தில்

அவள் கைபடாத ஏக்கத்தில்
அழும் துளிகளால்
வரக் காத்திருக்கிறது
ஒரு பெருமழை ..!

கவிஞர் முகம்மது அப்பாஸின்

கலாமுக்கு அஞ்சலியில்

கழுகுக் கண்களுக்கெல்லாம் மெழுகு பூசிவிட்டு
அணுவைச் சோதித்து அணு அணுவாய்ச் சாதித்தாய்” ரொம்ப ப்ரில்லியண்டான வரிகளில் அசந்தேன். மனிதம் மட்டும் என்றும் புனிதம் என்று சொல்லியது அழகு.

கவிஞர் ஹிதயத்துல்லா மாஹினின்

அயல்தேச வேலை கண்களைக் கசியவைத்தது. யுக தந்தையும் குமாரனும் எதிர்பாரா அதிர்ச்சி தந்த இன்னொரு வீரியமான கவிதை. தனித்து விடப்படும் இருக்கைகளும் இருட்டின் நிழலும் தனிமையையும் அடையாளமின்மையின் சோகத்தையும் புலப்படுத்தின.

கவிஞர் து. பிரேம் குமாரின்

நான் ஐந்தறிவு ஆடு பேசுகிறேன் வித்யாசக் கவிதை. ஆனால் நீளம் அதிகம். ஆனா அதன் சோகம் சொன்ன விதம் மனம் வருந்தியது. “பெண்ணை அடிமையாக்க பேரன்பு ஒன்றே போதுமடா “ என்ற கவிதை வரி ஆணியாய் இறக்கியது பெருவலியை.

கவிஞர் செல்வா ( பொன்னியின் செல்வன்) வின்

உலகம்

இமைகளுக்குப் பின்னே இரண்டு உலகம் !
நான் இருந்து வாழ !
இறந்தும் வாழ !

என்ற கண் தானம் பற்றிய ஹைக்கூ அற்புதம். தூரம், கடவுள் ஆகிய கவிதைகள் சிந்திக்க வைத்தன. காலம், புதையல் ரசனையான கவிதைகள்.

கவிஞர் ர. நானகுமாரின்

சுனாமி, தியாகம், காதல் சண்டை, பாசம், உப்பு  என ஹைக்கூக்கள் அனைத்துமே அழகு.  அதில் சோகமான ஒன்று

தண்டனை

குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை
உயிரை விட்டது
நீதிபதி கையில் உள்ள பேனா.

கவிஞர் ஸ்வேதா சந்திரசேகரனின்

பிரிந்து சென்ற உறவுக்கு

நீள் வளையப்பாதையில் இயங்குகிற பூமி
இடைவெளிகள் மாறுகிற கணங்களில்
இயங்க மறுக்கலாம்.
காதலும் தேடலும் உறவுகளும் முயற்சியில்லாத
ஈர்ப்பின் பிடியில் நீயில்லாமல்.

தனிமை அதிசோகக் கவிதை.

கவிஞர் அந்தோணி குரூஸின்

அம்மாவும் ஜனனமும் மாபெரும் சோகக் கவிதைகள். வாழ்க்கை கவிதையை மனைவிக்கு சமர்ப்பித்து இருப்பது மிகப் பொருத்தம்

கவிஞார் இரா. பிரபுலிங்கத்தின்

தென்றலே இனிய காதல் கவிதை. துள்ளி எழுந்துவிட்டேன் நகைக்கவைத்த கவிதை J சோகம் – தந்தைபற்றிய கவிதை. மிகவும் மனதை அசைத்தது.

கவிஞர் குகன் (எ) தாமோதரனின்

உழவனும் நானும் பொதுவுடைமைக் கவிதை.

“கூத்தாடியவன் தலைவன் என்றால்
கூழூற்றியவன் தெய்வமன்றோ ‘ என சிந்திக்க வைத்துவிட்டார். அப்துல் கலாம், சுபாஷ் சந்திர போஸ் என தலைவர்களின் கவிதைகளோடு இயந்திர மனிதனையும் அம்மாவின் பாசத்தையும் கவிதையாக்கி இருக்கிறார்.

கவிஞர் ராஜியின்

தூக்கமின்மை,கொறவை கெளுத்திக் கவிதைகளோடு பூனைக் கவிதையும் லைக் கவிதையும் அப்ளாஸை அள்ளுகிறது. முகநூல் நண்பர்களின் செயல்பாடுகள் பற்றிய மெல்லிய கிண்டல் தொனி அருமை.

மௌனமொழி மிகப் பிடித்திருந்தது. அதிலும்

மழையில் நனைந்து உடலை
சிலுப்பும் தூக்கணாங்குருவியின்
ஏளனப் பார்வையை தலைமீது
பிடித்திருக்கும் குடையினால்
மறைத்தால் போதுமெனக்கு
மௌனமொழி பிடித்திருக்கிறது.

கடல், ஓவியம் கவிதைகள் அழகு.

கவிஞர் அருணாசுரேஸ் கந்தசாமியின்

மழலை, அப்துல்கலாம், தெளிந்தேன், அழகு கவிதைகள். வேற்றுமை அதிர்ச்சிக் கவிதை.

கவிஞர் சிவகாமியின்

சந்திப்பு அழகு. அழுதுவிடத்தான் தோன்றுகிறது கவிதை வலி.

கவிஞர் சர்வேஷ்.இராவின்

லவ்வாங்கி, நவீனவன் காதல், ஆட்கொள் அழகான கவிதைகள்.

கவிஞர் ஜா.பெலிக்ஸ் பெமினியனின் (இழையன்).

தாயின் ஏக்கம் வருத்தம். நண்பன், அன்னை பாசக்கவிதைகள்.

கவிஞர் சிவதர்சினி ராகவனின்

ஆண்மையும் பெண்மையும் அர்த்தநாரீஸ்வரராக வாழும் மேன்மையைச் சொன்ன கவிதை. தாய்க்கு ஒரு வாழ்த்து, தமிழ் மொழி  ஆகியன அமிழ்தக் கவிதைகள்.

கவிஞர் மகிழினியின்

நிறைந்து கொண்டிருக்கின்றன
மறைக்கப்பட்ட பாவங்களால்
கோவில் உண்டியல்கள் .

மற்றும்

சாண் வயிற்றுக்காய்
முழம் நீளும் கைகளில்
பசிரேகைகள்

ஆகியனவும் குழந்தையின் ஏக்கம், தடை மீறும் காதல் இன்னும் பிற கவிதைகளும் நச் ரகம்.

கவிஞர் சீதா ஷாம்குமாரின்

இலை

இலைகளுக்கெல்லாம் இங்கிதம் தெரிகிறது !
வேருக்கு உரமாகிறதே தவிர விஷமாவதில்லை. என்ற கவிதையும்

ஒரு கோடி ஆன்மா

பட்டுச் சரிகைகளில் ஒரு கோடி
ஆன்மாக்களின் சாபம் இருக்கிறது
உங்களுக்குக் கௌரவம் மட்டும் தெரிவதெப்படி ?

என்ற கவிதையும் அவள் விகடனில் வெளியான ’யாரோ நெய்த புடவைகளு’ம், ஜன்னலின் உள்ளங்கை உலகும், யதார்த்தத்தை அறைந்த கவிதைகள். கீற்று கவிதைகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் மனிதத்தைக் கேள்வி கேட்கும் கவிதைகள்.

கவிஞர் நதனிகா ராயின்

கவிதைகள் மிக உன்னதமான உணர்வின் வெளிப்பாடுகள். மனம் தொட்ட கவிதைகள் அனைத்துமே.

நீ எனக்கு அளித்த பரிசுகளில்
அழகானது இந்தத் தனிமை.

நீ என்னைச் சிதைத்துக் கொண்டும்
நான் உன்னைச் செதுக்கிக் கொண்டும்
வாழ்ந்துகொண்டேயிருக்கிறோம் மனத்தளவில்.

என்னை விட்டுவிடுங்கள்
வாழ்ந்து விடுகிறேன் ஒரு ஓரமாக
ஒரு மரத்தின் கதறல்.

நிறைகுடத்தை மீறித் தளும்புகிறது
இவள் கொண்ட நளினம்.

என அட போடவைத்த கவிதைகள் சில . பல அவரின் வலியெழப் பிறந்த கவிதைகள்.

முடிவாக அனைவரின் கவிதைகளும் கலந்து ஒரு ஜூகல் பந்தி. ஓவியர் புவி, ஆம்புலன்ஸ், சிட்டுக் குருவி, ராஜியின் பெண்ணியம், மகிழினியின் நினைவு, தலைவர்கள் தெரு, குகனின் ஆடிப்பெருக்கு கவிதை எல்லாம் முத்திரைக் கவிதைகள்.

கவிதைகளில் இன்னும் என்னை அசத்திய வரிகள் அநேகம். ஒவ்வொரு கவிஞர் பற்றிய சுய குறிப்போடு அவர்களது முகநூல் பக்கமும் மெயில் ஐடியும் கூடக் கொடுத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் நல்ல தொகுப்பு படித்துப் பாருங்கள். நன்றி ராஜி அனுப்பியமைக்கு J

நூல் :- புல்லாங்குழலும் இருபது துளைகளும்.
தொகுப்பாசிரியர்கள் – சீதா – மகிழினி
பதிப்பகம் – வாசகன் பதிப்பகம்.
பதிப்பாசிரியர் :- கவிஞர் ஏகலைவன்.
விலை :- ரூ. 90/-

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை 
எஸ்.ராமகிருஸ்ணன் 
உயிர்மை பதிப்பகம் 
விலை 180/- டிசம்பர் 2008 முதல் பதிப்பு. 


எஸ்.ராமகிருஸ்ணன் அவர்களை அறிமுகப்படுத்தியது மின்னிதழ் பரிசாகக் கொடுத்த நகுலன் வீட்டில் யாருமில்லை என்ற கதை தொகுப்பிலிருந்த புனைவு கதைகள்தான், பிறகு சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டுக் கொண்டுருக்கிறேன். சரசரவென மனதில் பதியும் இவர் பேச்சால் தீவிர வாசகியாக உறுபசி, நிமித்தம் என்ற நாவல்களை வாசிக்க ஆரமித்த முப்பது பக்கங்களுக்கு மேல் செல்ல முடியவில்லை. உறுபசி இலக்கியம் படித்து வேலையின்றி வறுமையில் வெறுமையில் வாழ்ந்த இளைஞனின் இறப்பிலிருந்து தொடங்கி அவன் வாழ்க்கைக்குள் இழுத்துச் செல்கிறது... அடர்த்தியை உள்வாங்க முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டேன். பின் நிமித்தம் அதைப் படிக்க மிகுந்த மனதைரியம் தேவைப்பட்டது. வாய் பேச கேட்க முடியாத ஒரு ஆணின் உலகத்திற்குள் தர தரவென அழைத்துச் செல்கிறது. அதையும் முப்பது பக்கங்களுக்குள் மூடி வைத்து விட்டேன். நாவல் மூலம் வேறொருவர் வாழ்வை எட்டிப் பார்க்க மட்டுமே செய்கிறோம் என்ற வாதத்தை இந்த நாவல்கள் உடைத்து விட்டது. நம் ஒருவர் வாழ்க்கையை வாழவே வலிமையற்ற போது இவரது நாவல்கள் மூலம் மற்றொருவராக வாழ்வது மிக மிகக் கடினம். எனது இந்தியா என்ற வரலாற்று நூல் தற்போது வாசிப்பில் உள்ளது இதில் குறிப்பிட்டிருக்கும் நில அளவை குறித்த விபரங்கள், ஐஸ் அவூஸ் பற்றிய குறிப்புகள் இதுவரை கேள்விபடாதது இந்த நூலை படிக்காவிட்டால் என் வாழ்நாளில் இந்தியா குறித்த பல தகவல்கள் தெரிந்து கொள்ளப் படமாலே போயிருக்கும். நாவலுக்கு முன்பு சிறுகதைகள் தொகுப்புகளையாவது முடிப்போமென்று பதினெட்டாம் நூற்றாண்டின் மழை நூலில் விழுந்தேன். 

கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு என்பதாகத் தொடங்கும் அவர் முன்னுரை சுவாரசியமான நிகழ்வுகளுக்குத் தயார்படுத்துகின்றன. சில வரிகளை மறுபடி மறுபடி வாய் வாசித்துக் கொண்டிருக்க மனம் கதையிலிருந்து விடுபட்ட பட்டம் போலப் பல சம்பவங்களின் முடிச்சுகளைப் பற்றி அசை போட வைக்கிறது. பல இதழ்களில் வெளிவந்த கதைகள் தொகுப்பப்பட்ட இந்த நூலில் 27 சிறுகதைகள் 27 பிம்பங்களைப் பிரதிபலிக்கும் சமூகக் கட்டமைப்புகளாக விரிகிறது. சோகத்தைத் தருமா சந்தோசத்தைத் தருமா என்ற எண்ண ஓட்டங்களில் தொடங்கிய எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் உபயோகித்த மொழியும் சமபவ கோர்வைகளும் கதாப்பாத்திரங்களின் நளினங்களும் புனைவின் சாரங்களும் அதிகமாக என்னை ஈர்த்தது என்று சொல்லலாம். 

வீட்டிற்கு அப்பால் எதுவுமில்லை என்ற கதையில் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவை மட்டுமே தெரிகிற ஒரு மனிதனுக்கு அது ஒரு வியாதியாகத் தெரிந்து பின் அதுவே வரமாகத் தெரிவதாகக் கதை முடிந்தாலும் அதைச் சுற்றி பலவாறு சிந்திக்க வைக்கும் வாக்கியங்கள் மனசாட்சியை உலுக்குவது உண்மை. '' உண்மையில் உலகம் எதற்காக இத்தனை பெரிதாகவும் தொடர்பற்ற ஆயிரக்கணக்கான இயக்கங்களோடும் இருக்கிறது, அதனால் தனக்கு என்ன பலன் என்ற சலிப்பு வந்தது'' என்ற வாக்கியம் எத்தனை அபத்தமாகச் சுயநலம் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. என்னைச் சாம்பல் கிண்ணம் போல உபயோகிக்கிறார்கள் என்ற கதையில் அடையாளமில்லாத ஒரு ஆண் எவ்வாறொல்லாம் உபயோகிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது (எடுபிடியென்று சிலர் வைத்திருப்பார்களே அதைப் போல). அவனே அநீதிகள் பற்றி மூன்று கற்பனை கதைகளைச் சொல்லி இதில் பொய் பெயர்கள் இருந்தாலும் அதில் உங்களில் யார் பெயராக மாற்றினாலும் அதை உண்மையாக்கி கொள்ளலாமென்று சொல்லி நமக்கும் சாம்பல கிண்ணமாகிறான். வரலாற்றில் கால் பதித்த ஓரினச் செயற்கையாளர்களான கில்ஜி - மாலிக்காபூரின் அழிவு, பூமியின் கண்களே குளங்கள் என்ற சித்தார்த்தர் புத்தரான சம்பவங்களைப் புனைவுகளாக்கி சுவைபடக் கொடுத்துள்ளார். 

பிறந்து வளர்ந்த கிராமத்தில்தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கும் வயதானவரிகளின் எண்ணப் போக்கை பற்றியும் இரு கதைகள் பேசுகின்றன. தங்களை அடிக்கும் ஆண்களுக்கு உடல் நிலை சரியில்லையென்றாலும் கடவுளிடம் மன்றாடும் பெண்களின் செய்கையை அப்படியே பிரதிபலிக்கிறது காதுள்ள கடவுள் கதை. செளந்திரவல்லியின் மீசை, 40 வயதில் பிறந்தநாள் வாழ்த்து கூடப் பெற முடியாத இரு குழந்தைகளின் தாய் ஜி சிந்தாமணி ஒரு நாள் பிடித்த நடிகை தேவிகாவாகப் பிடித்த இடத்திற்குச் சென்று பிடித்ததைச் சாப்பிட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லும் போது காட்டும் ஏக்கம், ஆண்களின் தெருவில் வீட்டிற்குள்ளே வாழ்ந்து இறக்கும் தாய், அலுவலகபணம் ஆறு லட்சத்தைத் தொலைத்த ஒருவரை புறக்கணிக்கும் அலுவலகர்கள் நண்பர்கள் மனைவி மக்கள், சுவருக்குள்ளே வீட்டின் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும் அம்மாவை போன்ற ஆணி, அன்பை உணராமல் அதிசயத்தைப் பரிசளிக்கப் பொருளை தேடும் கணவன் மனைவி, தோல்வியை மட்டுமே சிந்தித்துத் தீப்பெட்டியை வீணாய் உரசியே பொழுதை கழிப்பவரின் தனிமை போக்க தீக்குச்சி எரியும் போது வரும் சிறு மஞ்சல் கொக்கு, அருவருக்கத் தக்க தன்னை விற்றுக் கொள்ளும் கம்பிளி பூச்சியைத் தின்னும் நம்மிள் ஒருவன் இப்படி ஏகப்பட்ட புனைவுகளின் வழி நடப்பில் நம்மோடு உலகில் வாழும் உயிர்களை வரிசையாக அடுக்கி கொண்டே செல்கிறார். 

அப்பா புகைக்கிறார், உதிரி பொய்கள் என்னும் கதைகளில் குழந்தைகளின் பால்யத்தில் படும் காயம் ஆறாமல் அதைச் சுற்றி எரியும் நெருப்பாகக் கனன்று கொண்டேயிருப்பதை ஏதார்த்தமாகச் சொல்லி முகத்தில் அறைகிறார். இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன என்பது மிக மிக்கியமான கதை. கர்ப்பம் தரித்தபின் சண்டை அதிகமிட்டதால் அழுதாலோ என்னவோ தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தை பேசாமல் எதையோ வெறித்தப்படியே இருக்கிறது. பல இடங்களுக்குச் சுற்றியபிறகு பறவையின் சத்தத்தைக் கவனிக்கிறாள் என்பதை உணர்ந்து விதவிதமான பறவைகளைக் காண அலைகிறார்கள் ஒரிரு சொற்களைப் பேசுகிறாள் இன்னும் அவளைப் பேச வைக்கக் கூடிய பறவைகள் இருக்கின்றன அவற்றைத் தேடிக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதாகக் கதை முடிகிறது. மற்றொரு கதை விசித்ரி 12 வயதில் பின் மதியத்தில் ஏதோ ஒரு சம்பவத்தால் உடலில் துணி இல்லாமல் வீட்டிற்கு ஓடி வந்தவள் தினமும் முப்பது உடைகளை அணிந்து கொள்கிறாள் சணலால் கட்டி கொள்கிறாள் மேலும் ஒரு படி போய்ச் சதையோடு துணியைத் தைக்க முயல்கிறாள் 47 வயது வந்தும் இப்படியே அவள் இருப்பதற்கு அவள் ஊர் இவராக இருக்குமோ அவராக இருக்குமோ அந்த ஆள் மேசமானவன் இவன் அந்த விசயத்தில் வீக் என்று பலரை சந்தேகிக்கிறது. இறுதிவரை தெரியாத அந்தச் சம்பவத்தால் பின் மதியத்தில் வக்கிர எண்ணங்களைக் காட்டும் கணக்கற்றோரை இன்னும் கண்டும் காணாமலும்தான் சென்று கொண்டிருக்கிறார்கள். 

முத்தாய்ப்பாகப் பதினெட்டாம் நூற்றாண்டின் மழை ஆழமாகக் காட்டை வர்ணிக்கிறது. வலேசா மதம் மாற்றுவதற்காகப் பழங்குடியினரின் குடியிருப்புக்குச் செல்கிறான் அவர்களின் மொழியைக் கற்ற பிறகு பிரசங்கிக்கலாம் என்று கற்கிறான் ஒவ்வொரு பெளர்ணமிக்கு பிறகும் அது மறந்துவிடும் அது எங்கள் முன்னோர்கள் அவர்கள் நாக்கில் வந்து போகிறார்கள் என்கிறார்கள். மீண்டும் முயல்கிறான் ஏட்டில் பிரதி எடுக்கிறேன் மீண்டும் மறக்கிறான் வெறிபிடித்தவன் போல மொழை எப்படியாவது கற்க வேண்டுமெனக் காடெங்கும் அழைகிறான் அதிகமான மழை பொழிகிறது பிறகுதான் கவனிக்கிறான் காடும் அவர்களின் மொழியில் மனிதனை போல இணைந்திருக்கிறது. முதலில் காட்டைப் பற்றி அறிய வேண்டி செடி கொடிகளோடும் உலாவுகிறான் வானத்தை அறிகிறான் ஒரு பழங்குடி பெண்ணோடு கலக்கிறான் நோய் வந்து சாகக் கிடப்பவனைக் காப்பாற்றி நோயை ஆமைக்கு மாற்றி விடுகிறார்கள். பிரசங்கம் மதமாற்றம் மறந்து அவர்களின் ஒருவனாகி அவர்களோடு வேட்டைக்குச் சென்ற பிறகு மிசனரியிலிந்து வந்து விசாரித்து விட்டு செல்கிறார்கள். பிறகு காணாமல் போய் விடுகிறான். அவர்களின் மொழியைக் கற்க வந்தவன் அவர்களின் மொழியாக அவன் வாரிசின் நாக்கில் பேசப்படப் போகிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லி செல்கிறது கதை. வனத்துக்கும் பழங்குடியினருக்கும் இருக்கும் புரிதலை கதையெங்கும் குறித்துக் கொண்டே வருகிறார். ஒவ்வொரு வரியும் குறிப்பால் உணர கூடியவை உவமைகள் தளும்பி நிற்கும் எதிர்பார்ப்பை உரசி கற்பனைக்குச் சிறகு கொடுக்கிறது. 

பதினொட்டாம் நூற்றாண்டின் மழை என்னை நீந்த அனுமதித்திருக்கிறது.


செவ்வாய், 3 ஜனவரி, 2017

கொலுசு மின்னிதழ் - கட்டுரை நவம்பர் 2016




கீற்று - 08 ஆகஸ்ட் 2016

கடலின் நினைவுப் பூச்சிகள்



கடவுள் வீட்டு வாசலுக்கு வந்தார் 
பாத்திரத்துடன் வந்த எனக்கு ஒரு கிலோவுக்கு 
நாற்பத்தைந்து பூச்சிகளை நூற்றைம்பதுக்கு 
விற்று விட்டு 
சொம்பு தண்ணீரைக் குடித்து விட்டுச் சென்றார் 
பூச்சிகளின் மீசையுடன் தோலையும் தலையையும் 
பிய்த்துக் கொண்டேயிருக்கிறேன்
மனம் பாட்டியை மொய்த்துக் கொண்டிருக்கிறது 
இவர்களைக் கடவுளென அறிமுகப்படுத்தியவர் 
அசைவ உணவைத் தவிர்த்த பாட்டிதான் 
கடலைப் பற்றிய பாட்டியின் புரிதல்கள் விசித்திரமானதாகப் படும் 
கடலம்மாவிடமிருந்து கடல் குட்டிகளை 
கடத்திக் கொல்பவர்களையும் 
விற்பவர்களையும் கடவுள் என்பார் 
கடலுணவுக்கு மட்டும் நாள் கிழமை எதுவும் பார்க்க மாட்டார் 
கடலுணவுகளை வாசனை பிடித்தே உப்பு 
புளி கூட்டி வைக்கும் சமையலின் சுவை கனகச்சிதமாகயிருக்கும் 
மீன் முள்களைக் கொண்டு கைவேலை செய்வார் 
கடலில் கலக்கும் நதிகளிடம் தான் சொல்ல 
வேண்டிய இரகசியமொன்று இருக்கிறதென்பார் 
கடல் குறித்த கதைகளின் முடிவு சுபமே ஆனாலும் கண் கலங்குவார் 
பாட்டியின் வைராக்கியத்தில் வெல்லாத ஒன்றென தாத்தா சுட்டிக்காட்டுவது 
கடலுணவு சத்துகளைப் பற்றிய புரிதல்களைத்தான் 
ஒரே தோல்வியோடு தாத்தாவும் 
ஒரே புதிரோடு பாட்டியும் சென்றே விட்டார்கள் 
பதினாறாம் தேதி காரியத்தில் பாட்டியின் ஊரிலிருந்து 
வந்தவர் புதிரை உடைத்தார் 
மருதென்பவருக்கும் பாட்டிக்குமான காதலை 
கடலம்மா புயலொன்றில் பறித்திருக்கிறார் 
சமயத்தில் பைத்தியக்காரத்தன வைராக்கியங்களுக்குப் பின் 
ஆகச் சிறந்த அன்பு இருக்கவே செய்கிறது...

- சீதா, சென்னை

கீற்று - 08 ஆகஸ்ட் 2016

கீற்று - 3 ஜூன் 2016

வேடிக்கை விளையாட்டு


மாற்றம்
**********

இன்று மாறும்
நாளை மாறும்
நாளை மறு நாளேனும் மாறிவிடும்
கண்டிப்பாக மாறும்

என்றாவது மாறும்
நீங்களும் மாறுவீர்கள்
நானும் மாறுவேன்
அவர்களும் மாறுவார்கள்
ஆன்மா இழந்து 
இரத்தம் சுண்டி 
சதை, நரம்பு, உறுப்புகளை
மண் தின்ன
தலைகனம், திமிர், கர்வம், ஆணவம் 
இழந்து ஒன்றுமே இல்லாமல்
மொத்தமாய் நினைவுகளாய் மாறி போவோம் 
நினைக்க மனிதர்கள் மட்டுமே தேவை...

வேடிக்கை விளையாட்டு
*****************************

கடைசியில் நாக்கு கேட்கும் ஒரு சொட்டு
தண்ணீராகவும் இருக்கலாம்
கண்ணீராகவும் இருக்கலாம்
செங்குருதியாகவும் இருக்கலாம்
காலத்துக்கும் விதிக்கும் தெரிந்த விளையாட்டு அது
நீங்கள் எப்போதும் வேடிக்கை பார்க்கும் வாடிக்கையானவர்கள்தான்...

ஜீவன்
********
வானத்தை வரைந்தவள்
சிறகை வரைய சாளரத்தை தேர்ந்தெடுத்து விட்டாள்
ஓவியத்தின் ஜீவன் சாளரத்திற்குள் 
அடைபட்டுவிட்டது...

இங்கிதம்

************





இலைகளுக்கெல்லாம் இங்கிதம் தெரிகிறது!
வேருக்கு உரமாகுமே தவிர விஷமாகாது...

- சீதா, சென்னை
 கீற்று - 3 ஜூன் 2016

கீற்று - 02 நவம்பர் 2015

எதிர்வினைகளின் மீதான மோகம்

நான் இறக்க 
ஒரு நிமிடமோ
ஒரு நாளோ
ஒரு வருடமோ
பத்து வருடங்களோ
இருபது வருடங்களோ
முப்பது வருடங்களோ
நாற்பது வருடங்களோ
ஐம்பது வருடங்களோ
ஏன் எழுபத்தி இரண்டு
வருடங்களோ அதற்கு
மேலும் இருக்கக் கூடும்

நான் உயிரோடு வாழ 
அதே ஒரு நிமிடம் முதல்
அதே எழுபத்தி இரண்டு வருடங்களோ 
அதற்கு மேலுமோ இருக்கக் கூடும்

எதிர்வினைகளை விழிவிரிய 
கிளை விரித்து விவரித்து
நேர்வினைகளை ஓரிரு வார்த்தைகளில் 
பூப்போல உதிர்த்து வாழப் பழகி விட்டோம்!!

- சீதா

 கீற்று - 02 நவம்பர் 2015

கீற்று - 30 நவம்பர் -2015

அழைப்பு மணி பறவைகள்

தூசி படிந்திருக்கும் புத்தகங்கள்
சிந்தையைத் திறக்கும் சாவிகளாய்...

தேடல் கயிறுகளில் பயணப்படும் 
கனவுகள் பட்டங்களாய்...

சொந்தபந்தங்களின் எதிர்பார்ப்புகள்
விண்ணை முட்டிய மேகங்களாய்...

குடும்பத்தினரின் முணுமுணுப்புப்புகள் 
செவிகளில் குறுகுறுக்கும் அனல்களாய்...

துணையின் ஒத்த ரசனை பலமோ, பலவீனமோ 
அதைத் தாண்டிய ஏக்கப் பெருமூச்சுகளாய்...

சமையலறையின் பாத்திரங்கள் 
அணிவகுப்பின் ஒப்பாரிகளாய்...

அலுவலக கோப்புகள் 
மலை போல் குவிந்து 
நகர்தலுக்கான ஒப்புதலுக்காய்...

புறணி பேசும் அக்கம்பக்கத்தினரின் 
இணை சேராத அதிருப்திகளாய்...

மனமெங்கும் நிரம்பிக் கிடக்கிறது,
அனுதின வாழ்வியலுக்கான தேவைகள், 
சுவரில் பட்ட பந்துகளாய்
உருமாறுகிறது...

கிணற்றுத் தவளையாக இருந்துபின் 
கடல் மீனாக மாறி 
பிறகு கிணற்றிலே திசை மாறி வருவெதென்பது,
வீணையில் ஆயிரம் கோடி 
தேடல் நரம்புகளை 
ஒன்றன்பின் ஒன்றாகப் பிய்த்தெறிவதைப் போன்றது...

படைப்பாளிகளுக்கே உரித்தான 
சாபம் பெற்ற தவ வாழ்க்கை...

ஆண் படைப்பாளிகளுக்கான சாளரங்கள் 
பெரும்பாலான பெண் படைப்பாளிகளுக்கு எட்டாக்கனி...

விருப்ப நகர்வுக்கான உரிமை பறிக்கப்படுவதைக் காட்டிலும் 
உயிர் வாழ்வதென்பது சவத்தின் மேல் பயணமே...

- சீதா

 கீற்று - 30 நவம்பர் -2015

கீற்று - 07 மார்ச் 2016

சதுரங்க விளையாட்டு


என் மனக் குப்பை கூளங்களுக்குள் 
அவனொரு அலங்காரப் பொருள்.

***

முகப்பருவை கிள்ளி கொழுப்பை
நீக்கும் போதெல்லாம்,
ஆறு மாதத் தங்கை பாலில்லாமல்
இறந்தது நினைவில் தோன்றி மறைகிறது...

***

ஏழை வீட்டு கூரைகளின்
அலங்காரத் தோரணங்கள்
மழைத் துளிகள்.

***

பம்பரமாய் சுழற்றுபவனிடம்
கயிறையும் காலத்தையும்
கொடுத்து விட்டால்
சதுரங்க விளையாட்டை 
வேடிக்கைதான் பார்க்க முடியும்...

***
















கூட்டை அடையும் பறவைக்காக 
ஓரிரு வீடுகளையாவது
புனரமைக்காமல் இருக்கலாம்.


- சீதா

 கீற்று - 07 மார்ச் 2016

கீற்று - 03 ஆகஸ்ட் 2016

அழைப்பு மணி பறவைகள்


தினமும் தண்ணீர் ஊற்றுகிறார்கள் 
ஆனால் வளர்வதில்லை செடி 
வாடுவதில்லை பூக்கள் 
கதவை திறந்தே வைக்கிறார்கள் 
வாசமுமில்லை 
வண்ணத்துப் பூச்சியும் வருவதில்லை 
தேவையிருந்தாலும் 
பூக்களைப் பறிப்பதுமில்லை 
இலை சருகாவதுமில்லை 
எழிலிருந்தாலும் 
தென்றலில்லை 
இவை குறித்தெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை 
எங்கள் வீட்டு குளியலறையின் 
வெளிநாட்டிலிருந்து கப்பலில் இறக்குமதியான 
நவீன சலவைக் கற்களில் 
இயற்கையின் வண்ண ஓவியங்கள் அவைகள்...

***

பறவையின் சிறகிலிருந்து தூசுகளின் 
இயலாமைகள் உதிர்வதைப் போல 
அன்புடையோர் முத்தமிடும் கணங்களில் 
கனமான வலியுணர்கள் உதிர்கின்றன 
வானத்தில் பறக்கும் உணர்வை விட 
முத்தத்தைப் பெற்றுக் கொடுப்பது தித்திப்பானது...

****

தெருக் குழந்தைகள் ஓளிந்து பிடித்து விளையாடும் 
விளையாட்டை எப்போதும் தேடி கொண்டேயிருக்கிறார்கள் 
பங்களா கேட்டின் இடுக்கிலிருந்து 
விலையுயர்ந்த ஜிம்மியும் 
விதி மீற முடியாத சிறுவனும்...

****
ஒவ்வொரு ஆணிக்கு அடியிலும் மரத் தக்கைகள் 
ஒவ்வொரு மரத் தக்கைகளுக்குள்ளும் ஒரு வனம் 
ஒவ்வொரு வனத்திற்குள்ளும் எண்ணற்ற பறவைகள் 
அழைப்பு மணி கருவியில் பறவைகள் 
கத்தும் சத்தத்தைக் கேட்பவர்களுக்கு 
அப்பறவைகளின் ஆன்மா பாடும் 
சோக கீதம் ஒலிக்காது...

- சீதா, சென்னை
 கீற்று - 03 ஆகஸ்ட் 2016

திணை காலாண்டிதழ் - செப்டம்பர் 2016


புன்னகை இலக்கிய இதழ் - ஜூலை 2016


மாத இதழ்


கொலுசு மின்னிதழ் - நவம்பர் 2016



கொலுசு மின்னிதழ் - ஜனவரி 2016


ஜன்னல் இதழ் - அக்டோபர் 2016



கூழாங்கற்கள் - கனவுப் பிரியன்

கனவுப் பிரியன் அவர்களின் கூழாங்கற்கள்.
ஓவியா பதிப்பகம்
பக்கங்கள் 256
விலை 200/- ரூபாய்



முகநூலில் இயங்க ஆரம்பித்து வந்த முதல் பிறந்த நாளில் கிடைத்த முதல் பரிசைத் திரு. N.Rathna Vel ஐயா அவர்கள் அனுப்பி வைத்தார், அப்போதுதான் முதலில் பேசுகிறார். எழுத்தைக் கொண்டாடுபவர்களை இணைக்கும் முகப்புத்தகத்தின் பணி சாலச் சிறந்தது. மன்னிக்கவும் ஐயா அதிக நாட்கள் எடுத்து கொண்டேன்.

புத்தகத்தைப் பற்றி என்னால் உணர முடிந்த வாசிப்பனுபவத்தைப் பகிர்கிறேன்.

புத்தகத்தின் தலைப்பும் அட்டைப்படமும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போல அவ்வளவு பொருத்தம். இந்த புத்தகத்தில் என்னை மிகக் கவர்ந்தது எழுத்துகளின் வடிவம்தான், பெரிய எழுத்துகளில் 'ப', 'ம', 'ர' போன்றவை கதையை தாண்டி ரசிக்க வைக்கிறது. பக்க எண் குறியீடும் பெரிய எழுத்துகளிலிருப்பது சிறப்பு. பதிப்புரையில் முதலில் இடம் பெறும் கேள்விக்கான பதிலாக எழுத்தாளர் சுஜாதா அவர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். அந்த உணர்வை வாசிப்பனுபவம் கண்டிப்பாகக் கொடுக்கும். மூன்று அணிந்துரையும், பின் அட்டைப் படத்திலிருப்பதையும் சேர்த்து மூன்று வாழ்த்துரையும் மழை பெய்தால் வரும் மண் வாசனையை போல ஆவலை மேலெழுப்புகிறது. தன்னை எழுதித் தீர்த்தல் ஒரு ஆனந்தம். எல்லோருக்கும் எழுத்திடம் தஞ்சமடைய பல சந்தர்பங்கள் அமையும் அதைப் பயன்படுத்துவோர் பொருளாதார சரிவிலிருந்தாலும் சுயத்தைப் பற்றிய பெருமிதத்தில் மிதக்கலாம், புத்தகத்தின் ஆசிரியர் கனவுப்பிரியன், தந்தை இறந்தபிறகு தேடிக் கிடைத்த 11 டைரிகளைப் படித்து எழுத ஆரம்பித்து அதன் தொடர்ச்சியை என்னுரையில் கதை போலவே விவரித்திருக்கிறார்.

கூழாங்கற்களின் கதைகள் இருபத்தி ஒன்றும் உண்மையில் கூழாங்கற்கள்தான். ஆம் உலகைச் சுற்றிப் பார்க்க இயலாத ஏழைகள் எளிதில் படித்துணரக் கூடிய எளிய நடையில், துறை சாராத அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.வயதானவர்களும் கண் குறைபாடு இருப்பவர்களும் வாசிக்க வசதியாக பெரிய எழுத்துகளில் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் எனக்கும் உலகைச் சுற்றி பார்க்கும் ஆசை உண்டு. ஊர் சுத்த யாருக்குதான் கசக்கும். பல நாடுகளின் பழக்க வழக்கங்கள், குணநலன்கள், தட்பவெட்ப நிலைகளுக்கேற்ப வாழும் மக்களின் எண்ணங்களை சரளமாக காட்சிப் படுத்திவிட்டார். வெளிநாட்டு வாழ்வில் வரும் கசப்பையும் மீறி அனுபவத்தை, ரசனையை, சிந்தனையை வெளிக்காட்டும் ஆசிரியர் மருத்துவத் துறை சார்ந்த இயந்திரங்களை மென்பொருள் கொண்டு இயக்கும் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதைப் புனைவுகளின் வழியே நம்மையும் காண வைத்து விடுகிறார். கதை மாந்தர்களுடன் உடனடியாக ஒரு இணக்கம் வந்து விடுகிறது. அத்தனையும் வெவ்வேறு களத்தில் பயணிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது.

”மேட் இன் சைனா”, ”பனங்கொட்டை சாமியார்” இரு கதைகளைக் கணவரிடம் பகிர்ந்தேன். மேட் இன் சைனா மிகப் பிடித்து விட்டது அவருக்கு. என் கதை விவரிப்பைப் பார்த்து வியந்து விட்டார். பனங்கொட்டை சாமியார் அழ வைத்து விட்டார் முதுமையில் உணவுக்கும் அன்புக்கும் ஏங்குவது எவ்வளவு கடினம் என்று உணர முடிந்தது. தன்னம்பிக்கையையும் கொடுத்தார் பனங்கொட்டை சாமியார்.

" அவரு அனில் கும்ளே " கதையில் தரை விரிப்பு வந்ததுமே தெரிந்து விட்டது. அச்சசோ கிரிக்கெட்டா பிடிக்காத விளையாட்டு, ஆனால் படிக்கப் படிக்கப் பயங்கரமாக ரசித்துச் சிரிந்து கொண்டே படித்தேன். அதுவும் மைண்ட் வாய்ஸ் பேசுறாரே செம்ம கலக்கல் டைமிங் சென்ஸ். வேற்று ஊருக்குச் சென்றால் சுதந்திரம் இழந்து விளையாட்டுக்கு கூட ஆயிரம் முறை யோசிப்பது வலி.

பெண்ணின் வலிகள், வேதனைகள், மகிழ்ச்சி, இழப்பு, காதல், நட்பு, காமம் என அவர்களின் உணர்வுகளைக் கையாளும் விதம் மிக அருமை எங்கும் அதிகப்படி காணப் படவேயில்லை. நாலு தெருவுக்கு ஒரு வடிவு இருப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகள் தரும் நெருக்கடி உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது சிலர் மீள முடியாமல் தன்னையே வதைத்து கொள்வார்கள்.

”கடல் தாண்டிய உறவு” கதையில் முடிவை எதிர்பார்க்கவில்லை. ' யாருக்கு எங்க வாச்சிருக்குன்னு யாருக்கு தெரியும் ' நிச்சயத்தில் நின்று போன அப்பாவுக்குப் பேசிய பெண் பல வருட இடைவெளிக்குப் பிறகு எதேச்சையாகப் பையனை பார்க்கப் பரவசத்துடன் நெற்றியில் முத்தமிடுகிறார். கவிதையான தருணம். மனிதரில் இத்தனை நிறங்களா தலைப்பே என் கேள்வியானது. லிசி இனி மாறிடுவானு நினைக்கிறேன். சமீமாக்கு துணிச்சலும் தைரியமும் அதிகம் அதை விட காதல் மிக அதிகம். சமீமாக்கு கடைசிவரை தெரியாதுதானே...

"ஜைனப் அல் பாக்கர்" மூஸ்லீம் பெண்களின் மறுபக்கம். இறுதிப் பத்தியில் பலருக்குப் பளார். நிறையத் தகவல்கள் இருந்தது கதையில். வயதுக்கு வராத பிலிப்பைனி பெண்ணின் மன உணர்வுகளை சரியாகப் பிரதிபலிக்க வைத்து வீட்டீர்கள்.வேறு நாடு மொழி பழக்கவழக்கத்தில் வாழ்ந்தாலும் பெண் பெண்தான். சிக்கலான மனநிலையை உணர்கிறேன். "அக்கா நீங்க அழகா இருக்கிங்க! " வித்யா மாதிரி இருக்க ஆசைதான் ஆனால் கடினமாயிற்றே. முதலில் சில வர்ணிப்புக்கு மட்டும் பெண்கள் வருகிறார்களேனு நினைத்தேன் ஆனால் பெண்கள் சொல்வதைக் காட்டிலும் சிறப்பாக கையாண்டுருக்கிறீர்கள். நன்றிகள்.

”நாடு துறந்தவன்” கதையின் கதை மாந்தர் சுவாரசியமான மனிதர். ஆசிரியர் மாந்தர்களை வடிவமைக்கக் கவனிக்கும் யுத்தியை கலையாக பார்த்திருக்க வேண்டும். ”இனி ஒரு விதி செய்வோம்” ஏக்கத்தை வரவழைக்கிறது. இயந்திரங்கள் மருந்து மென்பொருள் மூலக்கூறுகளென்று சென்றாலும் கதை விலகாமல் மனதை அணைத்துச் செல்கிறது. ”ஓ.. ரசிக்கும் சீமானே” அருண் அட்டகாசம் (அருமை)

"குண்டு பாகிஸ்தானி", "உப்புக் காற்று" அன்புக்கும், வாசனைக்கும், குணத்துக்கும், தொடர்பில்லைனு காட்டுது. "பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா" - பணக்காரனா மட்டும் ஆனா போதுமா. நெற்றித் தழும்பில் அம்மா கடலை வெறித்துப் பார்ப்பது அதைப் பிரார்த்தனையாக கூட தேன்றும் என்று கூறும் இடம் வெகு அழுத்தம். ''களிமண் வீடு " கான்கிரீட் வீட்டை விட உயர்ந்ததாகப் படுகிறது. "இந்த மடம் இல்லனா சந்தை மடம்" - திறமை இருப்பவர்களுக்கென்ன கவலை. "கூழாங்கற்கள்" கதையில் தந்தையின் சுமை, தனிமை, வெறுமை சுடுகிறது. சுபத்தில் முடிந்தது மகிழ்ச்சி. "காட்சிப் பிழை" - படிப்பு வேலை திருமணம் குழந்தை குட்டினு வாழ்றதுதான் வாழ்க்கையா ? நல்ல கேள்வி, விடைதான் தெரியல.

வெளிநாடுகளைச் சுற்றி பார்க்கும் அனுபவம் வேணுமா ?

விசா வேண்டாம், பாஸ்போர்ட் வேண்டாம் கூழாங்கற்களை வாங்குங்க ஒரே மூச்சில் ரசித்து படித்து முடிங்க. சுவையான பயண அனுபவத்துக்கு நான் கிரண்டி.
கதைவழி புதிய அனுபவத்தைக் கொடுத்த கனவுப் பிரியன் அவர்களுக்கும் புத்தகத்தை பரிசளித்த திரு.ரத்ன வேல் ஐயா அவர்களுக்கும் நன்றிகள்...


சீதா

கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா

கன்னி 
ஜெ.பிரான்சிஸ் கிருபா 

சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்திற்குத் திரும்பும் வழி இது. 



430 பக்கம் இல்ல இல்ல 430 பகல்களும் இரவுகளும் தொடர்ந்து தேவை இப்பித்தன் பாண்டியோடு கடல் காடு மலை பாறை மழைனு பித்துப்பிடித்தது போல் சுத்த வைத்து விடுவார் ஜெ.பிரான்சிஸ் கிருபா அவர்கள். 

மனிதர் வாழ்ந்திருக்கார் பாண்டியாகக் கவிதைக்காக உவமைக்காக அழகியலுக்காக உணர்வியலுக்காக. ஒரு ஆணின் முழு வாழ்க்கையின்மன போராட்டத்தையும் பித்தனான அவன் கனவுகளுக்குள் சென்று விடுமாறு மாயப் பிம்பத்தை உருவாக்கி நிஜத்தில் உலாவ விட்டுருக்கிறார்.கன்னியை ஒரே மூச்சில் படிக்கச் சொன்னார் இப்புத்தகத்தை இவர் பதிந்த ஒரு பதிவை பார்த்துதான் வாங்கினேன் தோழர் Madhan Sendhil. பித்துப்பிடித்துப் போகவானு கேட்டேன். முழுவதையும் ஐந்து மாதமாக விட்டு விட்டு படிக்கும் பாக்கியம்தான் கிடைத்தது. ஒரே மூச்சில் படிப்பதும்பெரும் வரம் பெற்ற சாபம்தான். 

இடையில் சில சில பகுதிகள் புரிந்து கொள்ளவதே பெரும் சவால்தான் மனசாட்சியைச் சமாதான படுத்தித் தாவி தாவி சென்றேன். கடல் காடுமலை மழைனு சுத்த வைத்து இடையில் வரும் தாதி, அழகு மங்கை, சிப்பி, மான், கரடி ஒவ்வொருவரோடு உரையாடி அழுது மகிழ்ந்துனுகரைய வைத்திருக்கிறார். ஒவ்வொரு பாராவையும் வாசித்தால் நூறு குறிப்புகள் உவமைகளாவது கிடைக்கும். இடை இடையே வரும்கனவுகளில் நடக்கும் இலக்கற்ற பயணங்கள் காட்சிகளாக உருமாறி என்னையும் கடத்தி சென்றது உண்மை சுகமான அனுபவம். இன்னும்அதிகம் ஆழ்ந்து படித்திருக்கலாம். இலக்கிய நாவலாம் இலக்கியத்தைப் பத்தி ஒன்னும் தெரியாது ஆனால் உள்நுழைய எவ்வளவு சிக்கலோஅதை விடப் பல மடங்கு சிரமம் கற்பனையிலிருந்து வெளிவருவதும். 

கன்னியின் நாயகன் சிறு வயது முதல் அமலா அக்கா அன்போடும் பாசத்தோடும் (பெரியம்மா மகள்) உடன் ஒன்றி வாழ்ந்து பின்பு பிரிந்து சிலநாட்கள் சாரா என்ற பெண்ணோடு அன்போடு காதல் பித்தில் ஒன்றி பிரிகிறார். இரு பெண்களின் பிரிவும் பித்தை தலைக்கேற்ற அவனின்கனவில் நிகழும் காட்சிகளோடு இணைத்து நிஜத்தை அவ்வப்போது சொல்வது போல் நகர்கிறது கதை. 

இரு பெண்களும் கன்னியாஸ்திரியாகிறார்கள். 

பெண்களின் அன்பால் ஒருவன் எப்படிப் பித்தாகி அழைந்து தன்னிலை மறந்து கிடக்கிறான் என்பதை அவனுலகில் நுழைந்து முற்றிலும்பயணிக்கவைத்து நம்மையும் பித்துபிடிக்க வைத்து விடுகிறார். 

சில நாட்களில் சாராவுடனான காதல் ஊடல் பிரிவு சங்கடம் அவஸ்தை என்று நகரும் காட்சிகளின் வர்ணனை மீச்சிறப்பான உணர்வை புரட்டிஎடுக்கிறது. 

இன்னும் இரண்டு முறையாவது பாண்டியின் பித்துக்குள் மூழ்கி எழனும். 

முடித்தவரை வாசிப்பின் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறேன். 

சீதா 




தேவதைகள் தூவும் மழை -யாழிசை மணிவண்ணன்

யாழிசை மணிவண்ணன் அண்ணாவின் தேவதைகள் தூவும் மழை 

என் முகநுலில் உள்டப்பியில் ஒரு குறுஞ்செய்தி யாழிசை மணிவண்ணன் அண்ணாவிடமிருந்து வந்தது. 



ஏற்கனவே அவர் பக்கத்தைப் பார்த்திருக்கிறேன். மொத்தமே ஐந்து நிமிட உரையாடல். கவிதை பிடிக்குமா ? என்று கேட்டார், கரும்பு சாப்பிட கசக்கவா செய்யும் உடனே ரொம்பவும் பிடிக்குமென்றேன். விலை விசாரித்தேன், அனுப்பிய தொகையையும் சேர்த்துத் தானம் செய்யச் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். 

முன்றே நாட்களில் என் கைகளில் பூத்தது அண்ணாவின் கவிப்பூக்களான ‪#‎தேவதைகள்_தூவும்_மழை‬. 

விமர்சிக்க, வாழ்த்த தகுதியில்லை. 
ரசிக்க மனமிருக்கிறது. 

யாழிசை மணிவண்ணன் அண்ணாவிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். 

வாசிப்பு மோகம் என்னைத் துரத்தியது, வேலைப்பளுவின் சிறையிலிருந்தேன். மாலைநேர இரயில் பயணத்தில் வாசிப்பை தொடங்கினேன் மூன்று பக்கங்களில் மூழ்கி கூட்டத்தில் வாசிப்பின் ரசிப்பை எடுத்து விடுவார்களோ என்று பத்திரபடுத்தினேன். 

ஒருவழியாக ஒரு விடுமுறை தினத்தில் மோகத்தைத் தீர்த்தேன். 

புத்தகக் கவி பூக்களின் சுகந்த வாசனை என் அகத்தை மெய்சிலிர்க்க வைத்தது. 

மிக அருமையான படைப்பு. 

இன்னும் இரு முறையாவது அணு அணுவாய் படித்து ரசிக்க வேண்டும். 
நண்பர் ஒருவருக்கும் இதை விருந்தாக்க வேண்டும். 

#தேவதைகள்_தூவும்_மழை கவிபூக்களில் பூத்த மொத்த இரத்தினங்களில் ஒன்று. 

*இல்லத்தரசிகளுக்கு 
பிடித்த விலங்கு 
பூம் பூம் மாடு 
அனுபவித்து விளங்கு* 

‪#‎நன்றி_யாழிசை_மணிவண்ணன்_அண்ணா‬ 

உங்கள் அடுத்தப் படைப்பிற்காகவும் காத்திருக்கிறேன் அண்ணா. 

சீதா 


புத்தக அனுபவம்- எனக்கு ஏன் கனவு வருது - எஸ்.ராமகிருஸ்ணன்

எனக்கு ஏன் கனவு வருது 
எஸ்.ராமகிருஸ்ணன் 
எண்ணம் : ஆர்.ஆகாஸ் 
விலை - 35/- 





எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஸ்ணன் என்னும் எஸ்ரா அவர்கள் சிறுவர்களுக்கென்று எழுதிய ஏழு புத்தகங்களுக்குள் ஒன்று. 
எழுத்துலகின் ஆளுமை எஸ்ரா அவர்களுக்கென்று தனித்தன்மை உண்டு. பின் அட்டை படத்திலே புத்தகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார். 
" இந்த உலகில் எத்தனை கதைகள் இருக்கின்றன ? 
இந்தக்கேள்விக்கு யாராலும் சரியான பதிலை சொல்லவே முடியாது. காரணம், உலகின் மொத்த மனிதர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகம்" 
எனபவர் இக்கதையைத் தன் மகன் ஆகாஷ் அவர்களோடு இணைந்து அவர் கொடுத்த கதாப்பாத்திரங்களையும் முக்கிய நிகழ்வுகளையும் சேர்ந்து பேசி ஒன்றிணைத்து எழுத்துருவம் கொடுத்திருக்கும் அவர் " உங்கள் குழந்தைகளுக்கு இது போலக் கதை சொல்லும் திறனும் எழுதும் திறனும் இருக்கக் கூடும். அதை அடையாளம் கண்டு கொண்டாட வேண்டும் என்பதே இந்த முயற்சிக்கான முக்கியக் காரணம்" என்கிறார். 
குழந்தைகளின் தலை வாலற்ற கேள்விகளுக்குப் பதில் அளித்துத் திருப்தி படுத்துபவர்களுக்கு ஆதித கற்பனைத் திறன் வேண்டும். அதிலும் கடல், கனவு குறித்த கேள்விகளுக்கு அவர்களின் விளையாட்டு உலகில் சென்று தெளிவான விளக்கங்களில் விளையாட விட்டு சிந்திக்கும் வழி அமைத்து அழைத்து வந்து விடுகிறார் நூலின் ஆசிரியர். ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் ஒவ்வொரு கற்பனை மிகுந்த கனவு உலகமுண்டு. வளர வளர தரை மட்டமாகும் ஆனாலும் பால்யத்தில் பதிந்த கற்பனை கதாபாத்திரங்களின் குணதிசயங்களைப் பொறுத்தியே நாம் அடுத்தவர்களை அலசும் அணுகுமுறைகள் அமையும், காரணமின்றி ஒருவரை பிடிக்கவும் ஒருவரை வெறுக்கவும் செய்துவிடுவதுவும் இப்படியானவைகளால்தான். இக்கதை வழி பயணிக்கும் குட்டி மீன் என்னையும் கடலுக்குள் இழுத்து சென்று விட்டது துடுக்கு தனமான ஆழ் அறிவின் கேள்விகளாகக் கனவு குறித்துக் கேள்வி கேட்டுக் கொண்டே பயணிக்கிறது, சளைக்காமல் பதிலடிகளையும் கொடுத்துக் கொண்டே நகர்கிறது. கடலுக்குள்ளும் கனவுக்குள்ளும் இன்னும் நாம் ஆராய்ந்து அறிய வேண்டிய பல அதிசயங்கள் கிடந்தாலும் அதைக் குறித்துச் சிந்திக்கத் தூண்டி பல கலவை எண்ணங்களையும் புகுத்தி விடுகிறது. 


 குழந்தைகளுக்கு இது போலான நல்ல நூல்களின் வாசிப்பை ஊட்டி சிந்திக்கும் ஊட்டச்சத்தைக் கொடுத்து எழுத்தின் மீது நம்பிக்கையை அளித்துச் சுயமாக எதையும் செய்யத் திடம் கொடுக்க வேண்டியது பொற்றோர்களான நம் கடமை. 
மிகச் சுவாரசியமான நடையுடன் சர சரவெனக் கடலில் நீந்தி கனவின் விதையை எடுக்க வைத்து விடும். குழந்தைகளுக்குக் கொடுக்குமுன் நீங்களும் ஒருமுறை படிச்சிடுங்க. நம் உலகை விட அவர்கள் உலகில்தான் அதிசயம் அனேகம் கொட்டிக் கிடக்கிறது. குழந்தை கேள்வி கேட்டுத் திருத் திரு முழிச்சோம்னா அவ்வளவுதான் ''உங்களுக்கு இது கூடத் தெரியாதா'' னு கேட்டுடுவாங்க. 

எதை புணர தடவுகிறாய்




என் பிஞ்சு அங்கங்களுள்ள என்னில் எதை
புணர தடவுகிறாய்

மார்புகளும் புடைத்திருக்கவில்லை
இடையும் மெருகேறியிருக்கவில்லை
மாதவிலக்கும் வரும் வயதும் எனகில்லை

உடல் தெரிய அரைகுறை ஆடை அணியவில்லை

கண்ணால் கவர்ச்சி வலை வீசவில்லை
ஆணினித்தை பழிக்கவில்லை
பெண்ணியம் பேசவில்லை
புரட்சி காரியும் நானில்லை
அகங்காரமும் கொள்ளவில்லை
ஆணவ செருக்கும் எனக்கில்லை
திமிர் பேச்சும் பேசவில்லை
சரிசமமும் கேட்கவில்லை
பெண்ணுரிமை சட்டமும் பேசவில்லை
பெண்ணிய கவிதைகளும் எழுதவில்லை
அடக்குமுறை பற்றியும் உரையாற்றவில்லை
பெரியாரிசமும் உணர்த்தவில்லை
எதிர்த்து பேசவும் தைரியமில்லை

சாதி கலவரமும் நடக்கவில்லை
இன சண்டைகளும் வரவில்லை
மதமும் மாறவில்லை
இலங்கை பெண்ணும் நானில்லை
நுனி நாக்கு ஆங்கிலமும் பேசவில்லை
நடுஇரவில் எங்கும் செல்லவும் இல்லை

திங்க சோறும் கேட்கவில்லை
பழைய உடுப்பும் தேவையில்லை
பணங்காசும் திருடவில்லை

கலவி குறித்தும் அறிந்திருக்க வில்லை
சூழ்நிலை தாக்குதலும் நடத்த தெரியவில்லை

ஏன் என்னை தவறாக நெருங்குகிறாய்
வன்புணர்வு செய்ய முயற்சிக்கிறாய்

பிஞ்சு அங்கங்களுள்ள என்னில் எதை
புணர தடவுகிறாய்.