http://honeylaksh.blogspot.com/2017/03/blog-post_53.html
சீதா – மகிழினியின் புல்லாங்குழலும் இருபது துளைகளும் – நூல்முகம்.
சீதா – மகிழினியின் புல்லாங்குழலும் இருபது துளைகளும் – நூல்முகம்.
கவிதைத் தொகுதி என்பது அருகிவரும் காலம் இது. இப்போது முகநூல் கவிஞர்கள் 20 பேரின் கவிதைகளில் சிலவற்றைத் தொகுத்து அழகான புத்தகமாக்கம் செய்திருக்கிறார்கள் சீதா யாழினி. ஒவ்வொருவரின் கவிதைகளும் அழகும் அற்புதமாகவும் இருந்தாலும் அதில் ஒரு சில கவிதைகள் வெறும் வார்த்தை வர்ணனைகளாகவும் இருக்கின்றன. கவிஞர்கள் இன்னும் நன்றாக இருக்கும் தங்கள் கவிதைகளில் சிலவற்றைத் தொகுத்துக் கொடுத்திருக்கலாம். ஆனாலும் தொகுப்பு முயற்சிக்கு அன்பும் வாழ்த்துக்களும். !
சித்ரா சுகுமாரின் அட்டைப்பட ஒவியம் அழகு. பின்னட்டையில் இருபது கவிஞர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அணிந்துரை வழங்கியவர்களின் புகைப்படமும் வெளியிட்டிருப்பது சிறப்பு. என் முகநூல் நட்புக்களான மனுஷி, யோ. புரட்சி, இயக்குநர் எழில், யாழிசை மணிவண்ணன், வலங்கைமான் நூர்தீன் ஆகியோர் அணிந்துரை வழங்கி இருக்கின்றார்கள். அப்துல் கலாம் பற்றி மூவர் எழுதி இருக்கின்றார்கள். சில அன்றன்றைய நிகழ்வுகள் பற்றிப் பேசுகின்றன. தாய், குழந்தை, பாசம், அன்பு, மனிதநேயம் பற்றிப் பேசும் கவிதைகளில் அஃறிணையின் வாய்மொழியாக ஆடு சொல்லும் கவிதையும் இருக்கிறது.
இனி என்னை அசத்திய ஒவ்வொருவரின் கவிதைகளும் தனித்தனியாக. ஹைக்கூ க்ளெரிஹ்யூ கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
கவிஞர் வெ சுப்ரமண்யத்தின் கவிதை
காலம்
மேய்ச்சல் நிலத்தில் கட்டிப் போட்ட
பசுவும் கன்றுமாய்ச் சுற்றி வந்து
காலம் மேய்ந்தன கடிகாரமுட்கள்.
கவிஞர் இந்து சம்யுக்தாவின்
மகளதிகாரத்தில்
அவள் கைபடாத ஏக்கத்தில்
அழும் துளிகளால்
வரக் காத்திருக்கிறது
ஒரு பெருமழை ..!
கவிஞர் முகம்மது அப்பாஸின்
கலாமுக்கு அஞ்சலியில்
கழுகுக் கண்களுக்கெல்லாம் மெழுகு பூசிவிட்டு
அணுவைச் சோதித்து அணு அணுவாய்ச் சாதித்தாய்” ரொம்ப ப்ரில்லியண்டான வரிகளில் அசந்தேன். மனிதம் மட்டும் என்றும் புனிதம் என்று சொல்லியது அழகு.
கவிஞர் ஹிதயத்துல்லா மாஹினின்
அயல்தேச வேலை கண்களைக் கசியவைத்தது. யுக தந்தையும் குமாரனும் எதிர்பாரா அதிர்ச்சி தந்த இன்னொரு வீரியமான கவிதை. தனித்து விடப்படும் இருக்கைகளும் இருட்டின் நிழலும் தனிமையையும் அடையாளமின்மையின் சோகத்தையும் புலப்படுத்தின.
கவிஞர் து. பிரேம் குமாரின்
நான் ஐந்தறிவு ஆடு பேசுகிறேன் வித்யாசக் கவிதை. ஆனால் நீளம் அதிகம். ஆனா அதன் சோகம் சொன்ன விதம் மனம் வருந்தியது. “பெண்ணை அடிமையாக்க பேரன்பு ஒன்றே போதுமடா “ என்ற கவிதை வரி ஆணியாய் இறக்கியது பெருவலியை.
கவிஞர் செல்வா ( பொன்னியின் செல்வன்) வின்
உலகம்
இமைகளுக்குப் பின்னே இரண்டு உலகம் !
நான் இருந்து வாழ !
இறந்தும் வாழ !
என்ற கண் தானம் பற்றிய ஹைக்கூ அற்புதம். தூரம், கடவுள் ஆகிய கவிதைகள் சிந்திக்க வைத்தன. காலம், புதையல் ரசனையான கவிதைகள்.
கவிஞர் ர. நானகுமாரின்
சுனாமி, தியாகம், காதல் சண்டை, பாசம், உப்பு என ஹைக்கூக்கள் அனைத்துமே அழகு. அதில் சோகமான ஒன்று
தண்டனை
குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை
உயிரை விட்டது
நீதிபதி கையில் உள்ள பேனா.
கவிஞர் ஸ்வேதா சந்திரசேகரனின்
பிரிந்து சென்ற உறவுக்கு
நீள் வளையப்பாதையில் இயங்குகிற பூமி
இடைவெளிகள் மாறுகிற கணங்களில்
இயங்க மறுக்கலாம்.
காதலும் தேடலும் உறவுகளும் முயற்சியில்லாத
ஈர்ப்பின் பிடியில் நீயில்லாமல்.
தனிமை அதிசோகக் கவிதை.
கவிஞர் அந்தோணி குரூஸின்
அம்மாவும் ஜனனமும் மாபெரும் சோகக் கவிதைகள். வாழ்க்கை கவிதையை மனைவிக்கு சமர்ப்பித்து இருப்பது மிகப் பொருத்தம்
கவிஞார் இரா. பிரபுலிங்கத்தின்
தென்றலே இனிய காதல் கவிதை. துள்ளி எழுந்துவிட்டேன் நகைக்கவைத்த கவிதை J சோகம் – தந்தைபற்றிய கவிதை. மிகவும் மனதை அசைத்தது.
கவிஞர் குகன் (எ) தாமோதரனின்
உழவனும் நானும் பொதுவுடைமைக் கவிதை.
“கூத்தாடியவன் தலைவன் என்றால்
கூழூற்றியவன் தெய்வமன்றோ ‘ என சிந்திக்க வைத்துவிட்டார். அப்துல் கலாம், சுபாஷ் சந்திர போஸ் என தலைவர்களின் கவிதைகளோடு இயந்திர மனிதனையும் அம்மாவின் பாசத்தையும் கவிதையாக்கி இருக்கிறார்.
கவிஞர் ராஜியின்
தூக்கமின்மை,கொறவை கெளுத்திக் கவிதைகளோடு பூனைக் கவிதையும் லைக் கவிதையும் அப்ளாஸை அள்ளுகிறது. முகநூல் நண்பர்களின் செயல்பாடுகள் பற்றிய மெல்லிய கிண்டல் தொனி அருமை.
மௌனமொழி மிகப் பிடித்திருந்தது. அதிலும்
மழையில் நனைந்து உடலை
சிலுப்பும் தூக்கணாங்குருவியின்
ஏளனப் பார்வையை தலைமீது
பிடித்திருக்கும் குடையினால்
மறைத்தால் போதுமெனக்கு
மௌனமொழி பிடித்திருக்கிறது.
கடல், ஓவியம் கவிதைகள் அழகு.
கவிஞர் அருணாசுரேஸ் கந்தசாமியின்
மழலை, அப்துல்கலாம், தெளிந்தேன், அழகு கவிதைகள். வேற்றுமை அதிர்ச்சிக் கவிதை.
கவிஞர் சிவகாமியின்
சந்திப்பு அழகு. அழுதுவிடத்தான் தோன்றுகிறது கவிதை வலி.
கவிஞர் சர்வேஷ்.இராவின்
லவ்வாங்கி, நவீனவன் காதல், ஆட்கொள் அழகான கவிதைகள்.
கவிஞர் ஜா.பெலிக்ஸ் பெமினியனின் (இழையன்).
தாயின் ஏக்கம் வருத்தம். நண்பன், அன்னை பாசக்கவிதைகள்.
கவிஞர் சிவதர்சினி ராகவனின்
ஆண்மையும் பெண்மையும் அர்த்தநாரீஸ்வரராக வாழும் மேன்மையைச் சொன்ன கவிதை. தாய்க்கு ஒரு வாழ்த்து, தமிழ் மொழி ஆகியன அமிழ்தக் கவிதைகள்.
கவிஞர் மகிழினியின்
நிறைந்து கொண்டிருக்கின்றன
மறைக்கப்பட்ட பாவங்களால்
கோவில் உண்டியல்கள் .
மற்றும்
சாண் வயிற்றுக்காய்
முழம் நீளும் கைகளில்
பசிரேகைகள்
ஆகியனவும் குழந்தையின் ஏக்கம், தடை மீறும் காதல் இன்னும் பிற கவிதைகளும் நச் ரகம்.
கவிஞர் சீதா ஷாம்குமாரின்
இலை
இலைகளுக்கெல்லாம் இங்கிதம் தெரிகிறது !
வேருக்கு உரமாகிறதே தவிர விஷமாவதில்லை. என்ற கவிதையும்
ஒரு கோடி ஆன்மா
பட்டுச் சரிகைகளில் ஒரு கோடி
ஆன்மாக்களின் சாபம் இருக்கிறது
உங்களுக்குக் கௌரவம் மட்டும் தெரிவதெப்படி ?
என்ற கவிதையும் அவள் விகடனில் வெளியான ’யாரோ நெய்த புடவைகளு’ம், ஜன்னலின் உள்ளங்கை உலகும், யதார்த்தத்தை அறைந்த கவிதைகள். கீற்று கவிதைகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் மனிதத்தைக் கேள்வி கேட்கும் கவிதைகள்.
கவிஞர் நதனிகா ராயின்
கவிதைகள் மிக உன்னதமான உணர்வின் வெளிப்பாடுகள். மனம் தொட்ட கவிதைகள் அனைத்துமே.
நீ எனக்கு அளித்த பரிசுகளில்
அழகானது இந்தத் தனிமை.
நீ என்னைச் சிதைத்துக் கொண்டும்
நான் உன்னைச் செதுக்கிக் கொண்டும்
வாழ்ந்துகொண்டேயிருக்கிறோம் மனத்தளவில்.
என்னை விட்டுவிடுங்கள்
வாழ்ந்து விடுகிறேன் ஒரு ஓரமாக
ஒரு மரத்தின் கதறல்.
நிறைகுடத்தை மீறித் தளும்புகிறது
இவள் கொண்ட நளினம்.
என அட போடவைத்த கவிதைகள் சில . பல அவரின் வலியெழப் பிறந்த கவிதைகள்.
முடிவாக அனைவரின் கவிதைகளும் கலந்து ஒரு ஜூகல் பந்தி. ஓவியர் புவி, ஆம்புலன்ஸ், சிட்டுக் குருவி, ராஜியின் பெண்ணியம், மகிழினியின் நினைவு, தலைவர்கள் தெரு, குகனின் ஆடிப்பெருக்கு கவிதை எல்லாம் முத்திரைக் கவிதைகள்.
கவிதைகளில் இன்னும் என்னை அசத்திய வரிகள் அநேகம். ஒவ்வொரு கவிஞர் பற்றிய சுய குறிப்போடு அவர்களது முகநூல் பக்கமும் மெயில் ஐடியும் கூடக் கொடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் நல்ல தொகுப்பு படித்துப் பாருங்கள். நன்றி ராஜி அனுப்பியமைக்கு J
நூல் :- புல்லாங்குழலும் இருபது துளைகளும்.
தொகுப்பாசிரியர்கள் – சீதா – மகிழினி
பதிப்பகம் – வாசகன் பதிப்பகம்.
பதிப்பாசிரியர் :- கவிஞர் ஏகலைவன்.
விலை :- ரூ. 90/-



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக