கீழ் சாதிகாரனே, மேல் சா(ச)திகாரியான என்னைப் பார்க்காதே, காதலிக்காதே,
வயசுக் கோளாறோ, உண்மைக் காதலோ
நீ இளவரசனாய் சாக வேண்டாம்
நானும் திவ்யாவாய் செத்து வாழ வேண்டாம்
என் சா(ச)திக்காரனும் உன் சாதிக்காரனும் அடித்துக் கொண்டு சாக வேண்டாம்
உங்கள் ஊர்களின் குடிசைகள் தீப் பற்றி எரிய வேண்டாம்
நாம் எரியும் தீயில் நெய்யை ஊற்ற வேண்டாம்
உன்வீடும் என்வீடும் துக்க வீடாய் மாற வேண்டாம்
பத்திரிக்கைகள் கூட்டிக் குறைத்து செய்தியாக்கி வியாபாரம் பண்ண வேண்டாம்
பெரியாரை எந்த இவனும் விமர்சிக்க வேண்டாம்
உண்மைக் காதல் தம்பதிகளின் அன்பைக் கொச்சைப்படுத்த வேண்டாம்
யாரும் அரசியல் நடத்த வேண்டாம்
நான் என் சா(ச)திக்காரனை கைப்பிடித்து, அவன் இரத்தத்திலிருக்கும் சாதியைஅன்பாலும் காமத்தாலும் வீழ்த்தி ஆண் பிள்ளை பெறுவேன் உன்சாதிக்காரனுக்கு சம்பந்தியாக
நம் சந்ததிகளால் சாதி ஒழியட்டும் யாரையும் பலியிடாமல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக