கனவுப் பிரியன் அவர்களின் கூழாங்கற்கள்.
ஓவியா பதிப்பகம்
பக்கங்கள் 256
விலை 200/- ரூபாய்

முகநூலில் இயங்க ஆரம்பித்து வந்த முதல் பிறந்த நாளில் கிடைத்த முதல் பரிசைத் திரு. N.Rathna Vel ஐயா அவர்கள் அனுப்பி வைத்தார், அப்போதுதான் முதலில் பேசுகிறார். எழுத்தைக் கொண்டாடுபவர்களை இணைக்கும் முகப்புத்தகத்தின் பணி சாலச் சிறந்தது. மன்னிக்கவும் ஐயா அதிக நாட்கள் எடுத்து கொண்டேன்.
புத்தகத்தைப் பற்றி என்னால் உணர முடிந்த வாசிப்பனுபவத்தைப் பகிர்கிறேன்.
புத்தகத்தின் தலைப்பும் அட்டைப்படமும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போல அவ்வளவு பொருத்தம். இந்த புத்தகத்தில் என்னை மிகக் கவர்ந்தது எழுத்துகளின் வடிவம்தான், பெரிய எழுத்துகளில் 'ப', 'ம', 'ர' போன்றவை கதையை தாண்டி ரசிக்க வைக்கிறது. பக்க எண் குறியீடும் பெரிய எழுத்துகளிலிருப்பது சிறப்பு. பதிப்புரையில் முதலில் இடம் பெறும் கேள்விக்கான பதிலாக எழுத்தாளர் சுஜாதா அவர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். அந்த உணர்வை வாசிப்பனுபவம் கண்டிப்பாகக் கொடுக்கும். மூன்று அணிந்துரையும், பின் அட்டைப் படத்திலிருப்பதையும் சேர்த்து மூன்று வாழ்த்துரையும் மழை பெய்தால் வரும் மண் வாசனையை போல ஆவலை மேலெழுப்புகிறது. தன்னை எழுதித் தீர்த்தல் ஒரு ஆனந்தம். எல்லோருக்கும் எழுத்திடம் தஞ்சமடைய பல சந்தர்பங்கள் அமையும் அதைப் பயன்படுத்துவோர் பொருளாதார சரிவிலிருந்தாலும் சுயத்தைப் பற்றிய பெருமிதத்தில் மிதக்கலாம், புத்தகத்தின் ஆசிரியர் கனவுப்பிரியன், தந்தை இறந்தபிறகு தேடிக் கிடைத்த 11 டைரிகளைப் படித்து எழுத ஆரம்பித்து அதன் தொடர்ச்சியை என்னுரையில் கதை போலவே விவரித்திருக்கிறார்.
கூழாங்கற்களின் கதைகள் இருபத்தி ஒன்றும் உண்மையில் கூழாங்கற்கள்தான். ஆம் உலகைச் சுற்றிப் பார்க்க இயலாத ஏழைகள் எளிதில் படித்துணரக் கூடிய எளிய நடையில், துறை சாராத அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.வயதானவர்களும் கண் குறைபாடு இருப்பவர்களும் வாசிக்க வசதியாக பெரிய எழுத்துகளில் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு.
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் எனக்கும் உலகைச் சுற்றி பார்க்கும் ஆசை உண்டு. ஊர் சுத்த யாருக்குதான் கசக்கும். பல நாடுகளின் பழக்க வழக்கங்கள், குணநலன்கள், தட்பவெட்ப நிலைகளுக்கேற்ப வாழும் மக்களின் எண்ணங்களை சரளமாக காட்சிப் படுத்திவிட்டார். வெளிநாட்டு வாழ்வில் வரும் கசப்பையும் மீறி அனுபவத்தை, ரசனையை, சிந்தனையை வெளிக்காட்டும் ஆசிரியர் மருத்துவத் துறை சார்ந்த இயந்திரங்களை மென்பொருள் கொண்டு இயக்கும் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதைப் புனைவுகளின் வழியே நம்மையும் காண வைத்து விடுகிறார். கதை மாந்தர்களுடன் உடனடியாக ஒரு இணக்கம் வந்து விடுகிறது. அத்தனையும் வெவ்வேறு களத்தில் பயணிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது.
”மேட் இன் சைனா”, ”பனங்கொட்டை சாமியார்” இரு கதைகளைக் கணவரிடம் பகிர்ந்தேன். மேட் இன் சைனா மிகப் பிடித்து விட்டது அவருக்கு. என் கதை விவரிப்பைப் பார்த்து வியந்து விட்டார். பனங்கொட்டை சாமியார் அழ வைத்து விட்டார் முதுமையில் உணவுக்கும் அன்புக்கும் ஏங்குவது எவ்வளவு கடினம் என்று உணர முடிந்தது. தன்னம்பிக்கையையும் கொடுத்தார் பனங்கொட்டை சாமியார்.
" அவரு அனில் கும்ளே " கதையில் தரை விரிப்பு வந்ததுமே தெரிந்து விட்டது. அச்சசோ கிரிக்கெட்டா பிடிக்காத விளையாட்டு, ஆனால் படிக்கப் படிக்கப் பயங்கரமாக ரசித்துச் சிரிந்து கொண்டே படித்தேன். அதுவும் மைண்ட் வாய்ஸ் பேசுறாரே செம்ம கலக்கல் டைமிங் சென்ஸ். வேற்று ஊருக்குச் சென்றால் சுதந்திரம் இழந்து விளையாட்டுக்கு கூட ஆயிரம் முறை யோசிப்பது வலி.
பெண்ணின் வலிகள், வேதனைகள், மகிழ்ச்சி, இழப்பு, காதல், நட்பு, காமம் என அவர்களின் உணர்வுகளைக் கையாளும் விதம் மிக அருமை எங்கும் அதிகப்படி காணப் படவேயில்லை. நாலு தெருவுக்கு ஒரு வடிவு இருப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகள் தரும் நெருக்கடி உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது சிலர் மீள முடியாமல் தன்னையே வதைத்து கொள்வார்கள்.
”கடல் தாண்டிய உறவு” கதையில் முடிவை எதிர்பார்க்கவில்லை. ' யாருக்கு எங்க வாச்சிருக்குன்னு யாருக்கு தெரியும் ' நிச்சயத்தில் நின்று போன அப்பாவுக்குப் பேசிய பெண் பல வருட இடைவெளிக்குப் பிறகு எதேச்சையாகப் பையனை பார்க்கப் பரவசத்துடன் நெற்றியில் முத்தமிடுகிறார். கவிதையான தருணம். மனிதரில் இத்தனை நிறங்களா தலைப்பே என் கேள்வியானது. லிசி இனி மாறிடுவானு நினைக்கிறேன். சமீமாக்கு துணிச்சலும் தைரியமும் அதிகம் அதை விட காதல் மிக அதிகம். சமீமாக்கு கடைசிவரை தெரியாதுதானே...
"ஜைனப் அல் பாக்கர்" மூஸ்லீம் பெண்களின் மறுபக்கம். இறுதிப் பத்தியில் பலருக்குப் பளார். நிறையத் தகவல்கள் இருந்தது கதையில். வயதுக்கு வராத பிலிப்பைனி பெண்ணின் மன உணர்வுகளை சரியாகப் பிரதிபலிக்க வைத்து வீட்டீர்கள்.வேறு நாடு மொழி பழக்கவழக்கத்தில் வாழ்ந்தாலும் பெண் பெண்தான். சிக்கலான மனநிலையை உணர்கிறேன். "அக்கா நீங்க அழகா இருக்கிங்க! " வித்யா மாதிரி இருக்க ஆசைதான் ஆனால் கடினமாயிற்றே. முதலில் சில வர்ணிப்புக்கு மட்டும் பெண்கள் வருகிறார்களேனு நினைத்தேன் ஆனால் பெண்கள் சொல்வதைக் காட்டிலும் சிறப்பாக கையாண்டுருக்கிறீர்கள். நன்றிகள்.
”நாடு துறந்தவன்” கதையின் கதை மாந்தர் சுவாரசியமான மனிதர். ஆசிரியர் மாந்தர்களை வடிவமைக்கக் கவனிக்கும் யுத்தியை கலையாக பார்த்திருக்க வேண்டும். ”இனி ஒரு விதி செய்வோம்” ஏக்கத்தை வரவழைக்கிறது. இயந்திரங்கள் மருந்து மென்பொருள் மூலக்கூறுகளென்று சென்றாலும் கதை விலகாமல் மனதை அணைத்துச் செல்கிறது. ”ஓ.. ரசிக்கும் சீமானே” அருண் அட்டகாசம் (அருமை)
"குண்டு பாகிஸ்தானி", "உப்புக் காற்று" அன்புக்கும், வாசனைக்கும், குணத்துக்கும், தொடர்பில்லைனு காட்டுது. "பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா" - பணக்காரனா மட்டும் ஆனா போதுமா. நெற்றித் தழும்பில் அம்மா கடலை வெறித்துப் பார்ப்பது அதைப் பிரார்த்தனையாக கூட தேன்றும் என்று கூறும் இடம் வெகு அழுத்தம். ''களிமண் வீடு " கான்கிரீட் வீட்டை விட உயர்ந்ததாகப் படுகிறது. "இந்த மடம் இல்லனா சந்தை மடம்" - திறமை இருப்பவர்களுக்கென்ன கவலை. "கூழாங்கற்கள்" கதையில் தந்தையின் சுமை, தனிமை, வெறுமை சுடுகிறது. சுபத்தில் முடிந்தது மகிழ்ச்சி. "காட்சிப் பிழை" - படிப்பு வேலை திருமணம் குழந்தை குட்டினு வாழ்றதுதான் வாழ்க்கையா ? நல்ல கேள்வி, விடைதான் தெரியல.
வெளிநாடுகளைச் சுற்றி பார்க்கும் அனுபவம் வேணுமா ?
விசா வேண்டாம், பாஸ்போர்ட் வேண்டாம் கூழாங்கற்களை வாங்குங்க ஒரே மூச்சில் ரசித்து படித்து முடிங்க. சுவையான பயண அனுபவத்துக்கு நான் கிரண்டி.
கதைவழி புதிய அனுபவத்தைக் கொடுத்த கனவுப் பிரியன் அவர்களுக்கும் புத்தகத்தை பரிசளித்த திரு.ரத்ன வேல் ஐயா அவர்களுக்கும் நன்றிகள்...
சீதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக